குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ரீல்ஸ் எடுப்போரால் பக்தர்களுக்கு இடையூறு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ரீல்ஸ் எடுப்போரால் பக்தர்களுக்கு இடையூறு
Updated on: 
1 min read

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபர்கள் ஆதிக்கத்தால், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இவ்விழாவில் தினமும் இரவு 10 மணிக்கு மேல் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர். தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களை அம்மனை முழுமையாக தரிசனம் செய்ய விடாமல் தடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபர்கள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வீதி உலா புறப்பாட்டின் போது இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், வீடியோ, புகைப்படம் போடுவதற்காக, இவர்கள் செல்போன்களுடன் அம்மனுக்கு முன்னால் குவிந்துவிடுகின்றனர். சிலர் கைகளிலேயே செல்போனை உயர்த்தி பிடித்து வீடியோ மற்றும் படம் எடுக்கின்றனர். சிலர் நீளமான ஸ்டிக் வைத்து செல்போன் மூலம் பதிவு செய்கின்றனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு முன்னால் நின்று கொண்டு வீடியோ பதிவு செய்வதால் பக்தர்களால் அம்மனை முழுமையாக தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் பலரும் வேதனையோடு தெரிவித்தனர்.

தினந்தோறும் இரவில் அம்மன் வீதி உலா புறப்பாட்டின் போது இன்ஸ்டாகிராம், யூடியூபர்கள் ஆதிக்கத்தால் பக்தர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ரீல்ஸ் எடுப்போரால் பக்தர்களுக்கு இடையூறு
விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை: தமிழக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in