

வைகைச்செல்வன்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்று பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வல் அறிவித்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: ‘நான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.
ஒரு தலைவர், தானே அழிந்தால்கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றிபெற வேண்டும் என நினைப்பார். ஆனால் இயக்கமும், தொண்டர்களும் அழிந்தால்கூட தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல தலைவராக இருப்பதில்லை.
திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரசப் போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்துவிட்டது. வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டது.
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையில்கூட, அதிமுகவுக்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால் மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு, பணியாற்றி தற்போது விலகுவதை எண்ணிப் பார்க்கும்போது, என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை’ என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தவெக ஆட்சி அமைந்த பிறகு, அதிமுக நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஏற்கெனவே 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.
அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகினர். இவர்கள் அனைவருமே அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.