பிரியங் கார்கே
பெங்களூரு: மேகேதாட்டு அணை கட்டுவதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ள கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே, ‘மேகேதாட்டுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும்’ என தமிழக காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது ஒரு தனிப்பட்ட கருத்து என்று புறந்தள்ளியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
அதில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும்.
இதன்படி, தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.
எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே, “நீங்கள், நான், இல்லை யாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படிதான் நடந்தாக வேண்டும். உபரி நீர் கடலில் கலந்து வீணாவதாக உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது. மேலும் கந்ராடக மக்கள் அதை மேலும் திறம்பட பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
எனவே, இதன் நிமித்தமாக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ அதையெல்லாம் நாங்கள் எடுப்போம். தனிப்பட்ட கருத்துகள் இங்கே ஒரு பொருட்டே அல்ல. கர்நாடகா விவசாயிகளின் நலனுக்காக இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது.
நமது விவசாயிகள் பயனடைய வேண்டும். பெங்களூருவின் குடிநீர் தேவை பூர்த்தியாக வேண்டும். வெறும் விவசாயம் சார்ந்தது மட்டுமல்லாது ஒட்டுமொத்தத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் பொருளாதார வளர்ச்சி சார்ந்தது” என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
முன்னதாக, காவிரியில் மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது முதலில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், “காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் உயிர்நாடி. அதனை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது.
காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்து மேகேதாட்டு அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்மான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது,” என்று பேசியது நினைவுகூரத்தக்கது.