

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வீழ்த்தி, 15 ஆண்டு ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர், கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில், இதே தொகுதியில் ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் திமுகவில் வலுவான தலைவராக இருந்தவர் வி.எஸ்.பாபு. வடசென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். தமிழகத்தில் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தொகுதி மறுவரையறையில், சென்னை, புரசைவாக்கம் தொகுதியின் சில பகுதிகள் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதிகள் சேர்த்து புதிதாக கொளத்தூர் தொகுதி உதயமானது.
புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டது. இதனால், 2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின், கடந்த 2011 தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய, தொகுதி மாறி போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமை வலியுறுத்தியது. அதன் பிறகு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக கொளத்தூர் கண்டறியப்பட்டது.
அப்போது, வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வி.எஸ்.பாபுவின் கட்சி அதிகார பரப்பில் கொளத்தூர் தொகுதி இடம் பெற்றிருந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகன் போட்டியிடுவதால், அதை வி.எஸ்.பாபுவால் எதிர்க்க முடியவில்லை. ஸ்டாலின் வெற்றிக்காக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதே நேரத்தில், ஸ்டாலின் போட்டியிடுவதால், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அவருக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தந்தது. தனது கடும் உழைப்பால், ஸ்டாலினுக்கு வெற்றியையும் பெற்றுத் தந்தார். ஆனால், சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அந்த வெற்றியை ஸ்டாலினால் பெற முடிந்தது.
இதனால், ஸ்டாலினின் கோபத்துக்கு உள்ளானார் வி.எஸ்.பாபு. அந்த நேரத்தில், அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு திமுகவில் இணைந்தார்.
இவர் ஸ்டாலினுக்கு நெருக்கம் காட்டிய வேளையில், ஸ்டாலின் -வி.எஸ்.பாபு இடையே மோதல் முற்றியதால் திமுகவிலிருந்து வி.எஸ்.பாபு வெளியேறி, அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணியாற்றியதாக கூறி, 2018-ம் ஆண்டு வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
பின்னர், பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, அதிமுகவில் வி.எஸ்.பாபு இணைந்தார். ஸ்டாலினை எதிர்க்க வலுவான வேட்பாளர் தேவை எனக் கருதி, இவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை பழனிசாமி வழங்கினார்.
தேர்தல் நெருங்கி வரும் வேலையில், இவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால், அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்து, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை பெற்றார்.
இந்த தேர்தலில் ஸ்டாலினை வீழ்த்தி வெற்றியும் பெற்றுள்ளார். இதன் மூலம் 15 ஆண்டு பகையை தீர்த்துக் கொண்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.