

சென்னை: திமுக இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில், வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 30 புதிய இளைஞர் அணி மன்றங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுகவின் நீண்டகாலப் பாரம்பரியமான ‘மன்றங்கள்’ அமைக்கும் முறையை மீண்டும் முன்னெடுத்துள்ள இளைஞர் அணி, முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு (மேற்கு) பகுதியில் 30 மன்றங்களைத் தொடங்கியுள்ளது.
இதில் 12 மன்றங்களுக்கு நேரடியாகச் சென்று கொடியேற்றிய துணை முதல்வர், மீதமுள்ள 18 மன்றங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அண்ணா ராபின்சன் பூங்காவிலும், கருணாநிதி ஜான்சி ராணி பூங்காவிலும் அமைப்பைத் தொடங்கியதைப் போல, இன்று நாம் வள்ளுவர் கோட்டத்தில் இந்த மன்றங்களைத் தொடங்கியுள்ளோம்.
பரிந்துரைகள் இன்றி உழைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நீங்கள், திமுக ராணுவத்தின் பலம் மிக்க வீரர்கள். உங்களின் உழைப்பு 50% மக்கள் சேவையாகவும், 50% கழகப் பணியாகவும் இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு அரசு சான்றிதழ்கள், மருத்துவ உதவி என தேவையான உதவிகளை முன்னின்று செய்ய வேண்டும்.
சமூக நீதி மற்றும் திராவிட இயக்க வரலாற்றைப் படித்துத் தெளிவுபெற வேண்டும். களப்பணி மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் அரசின் சாதனைகளைத் துடிப்புடன் கொண்டு சேர்க்க வேண்டும். சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்குக் கட்சியில் உரிய உயர்வு நிச்சயம் கிடைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளன.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் போன்ற சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஒவ்வொரு மன்றமும் குறைந்தது 200 வாக்குகளையாவது நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சிற்றரசு, எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ. எழிலன், இளைஞர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.