

சென்னை: கேசவ விநாயகன் கவனித்து வந்த பணிகளை ஒருங்கிணைக்க பாஜகவில் 3 பேர் குழுவை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த கேசவ விநாயகத்தை, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் அவருக்குப் புதிய பொறுப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி அவர் முறைப்படி விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் ஆர்எஸ்எஸ்-ன் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேசவ விநாயகத்துக்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த பிரசோப குமார் புதிய அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், புதிய அமைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பேற்கும் வரை, கட்சியின் அன்றாடப் பணிகளையும், தேர்தல் முன்னேற்பாடுகளையும் ஒருங்கிணைக்க 3 பேர் கொண்ட குழுவை நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டப்பேரவை தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு, கமலாலயத்தில் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சாய் சத்யன் ஆகியோர் கொண்ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.