

உதயநிதி பிரச்சாரம்
சிவகங்கை : “கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார்” என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பேசியது: “ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019-ல் அவர்களே நிறுத்திவிட்டனர். ஆனால் முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்று, அவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணிகளை வழங்கினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தலை காட்டி அதிமுக, பாஜக நிறுத்த சதி செய்தது. அதை முறியடித்து ரூ.5,000 கொடுத்தார் முதல்வர். காலை 6.30-க்கு அனுப்பிய பணத்தை, குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி மோடி எடுத்துவிடுவார் என்ற பயத்தில் காலை 9 மணிக்கே பெண்கள் எடுத்துவிட்டனர். இந்த முறை 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
முதல்வர் சொல்வது போல் இந்த தேர்தல் தமிழகத்துக்கும், டெல்லிக்குமானது. இதில் டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு நாம் கேட்ட நிதியை கூட கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் கூட எந்த திட்டமும் தமிழகத்துக்கு இல்லை. இதனால் நேரடியாக வந்தால் தமிழக மக்கள் விடமாட்டர் என்று, அதிமுக என்ற போர்வையை போர்த்திக் கொண்டு பாஜக வருகிறது. அவர்களை தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது.
ஏற்கெனவே பழனிசாமிக்கு 10 தோல்விகளை கொடுத்துள்ளோம். இந்த தேர்தலில் 10 தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டு அனுப்ப வேண்டும். கேஆர்.பெரியகருப்பனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
சிவகங்கையில் திமுக வேட்பாளர் கருணாஸை ஆதரித்து உதயநிதி பேசியது: “முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்களை பார்த்திருப்போம். ஆனால் யாரும் முரட்டு அடிமையை பார்த்ததில்லை. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை பழனிசாமி தான். ஜாடிக்கு ஏற்ற மூடி போல், மோடிக்கேற்ற ஒரு பழனிசாமி.
இந்த தேர்தலில் தமிழகத்தில் பாசிச, சங்கிக் கூட்டத்துக்கு இடமில்லை என்று வெளியேற்ற வேண்டும். கடந்த தேர்தலில் பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார். அதிமுக வெற்றி பெற்றால் பாஜக தான் டெல்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்யும்” என்று அவர் பேசினார்.