“எல்டிஎஃப் அரசை அகற்ற கவுன்டவுன் தொடங்கிவிட்டது” - கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

“எல்டிஎஃப் அரசை அகற்ற கவுன்டவுன் தொடங்கிவிட்டது” - கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
1 min read

திருவல்லா (கேரளா): கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசாங்கத்தை அகற்றுவதற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்றும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பத்தினம்திட்டா மாவட்டத்தின் திருவல்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி, ‘‘கேரளா மிகுந்த திறனைக் கொண்டுள்ள போதிலும் வளர்ச்சிக்கான போட்டியில் அது மற்ற மாநிலங்களைவிட பின்தங்கியே இருக்கிறது.

கேரளாவின் கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியும் போதிய கவனம் செலுத்தாததே இதற்குக் காரணம்.

கிறிஸ்தவ மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் வட கிழக்கு மாநிலங்களிலும் கோவாவிலும் எத்தகைய வளர்ச்சித் திட்டங்களை என்டிஏ மேற்கொண்டதோ அதேபோல, கேரளாவிலும் என்டிஏ வளர்ச்சியை உறுதி செய்யும்.

கேரளாவில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்தியில் உள்ள என்டிஏ அரசாங்கம் எந்த ஒரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சிக் காலங்களைவிட கேரளாவின் வளர்ச்சிக்காக என்டிஏ அரசாங்கம் ஐந்து மடங்கு அதிக நிதியை செலவிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் சபரி ரயில் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. இதனால் திருவல்லா மக்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது அனைத்து தடைகளும் அகற்றப்படும்.

எல்டிஎஃப் அரசாங்கத்துக்கு விடைகொடுக்க வேண்டும் என்ற வலுவான மனநிலை கேரளாவில் நிலவுவதை பாஜக தொண்டர்கள் உணர்த்துகின்றனர். எல்டிஎப் அரசாங்கத்தை அகற்றுவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளாவில் ஆட்சி அமைக்கும்’’ என தெரிவித்தார்.

“எல்டிஎஃப் அரசை அகற்ற கவுன்டவுன் தொடங்கிவிட்டது” - கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
நாடாளுமன்றத்தை ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக மாற்ற மத்திய அரசு சதி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in