

சென்னை: வடபழனி சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்த முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 2 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயில் நிர்வாகத்தில் சில முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமாக கருதப்படும் இளநிலை உதவியாளர் ஹரி கோவிந்த் என்பவரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியக்காரராக பணிபுரியும் பழனி என்பவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார்.
சில நாட்களுக்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி பழனியை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் நிர்வாகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என அமைச்சர் எச்சரித்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.