

சென்னை: கென்யாவில் இருந்து சிகிச்சைக்காக, விமானம் மூலம் சென்னை வந்த 2 மாத குழந்தை உயிர்இழந்தது. கென்யா நாட்டை சேர்ந்த தம்பதி முவய், முதொனி.
இவர்களுக்கு 58 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து. அந்த குழந்தைக்கு எலினா என பெயர் வைத்தனர். குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது.
அங்கு சிகிச்சை பெற்றும் சரியாகாததால், மருத்துவர்களின் பரிந்துரையின்படி குழந்தையை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல பெற்றோர் முடிவு செய்தனர்.
கென்யாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை இல்லாததால், குழந்தையுடன் துபாய் வந்த பெற்றோர், துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
விமானம் சென்னையை நெருங்கி கொண்டிருந்த போது, குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி, விமான பணிப்பெண்களிடம் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமானியிடம் கூறினர்.
உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, விவரத்தை தெரிவித்து, விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைக்குமாறும், விமானத்துக்கு முன்னுரிமை அளித்து தரையிறங்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டு கொண்டார்.
இதன்படி, நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், 23 நிமிடங்கள் முன்னதாக காலை 7.52 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.
உடனடியாக, விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். ஆனால், குழந்தை உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.
சக பயணிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுபற்றி விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கென்யாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த 2 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம், சென்னை விமான நிலைய ஊழியர்கள், பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.