

சென்னை: ஆந்திர மாநிலம், உப்பரபலம், விழுகொண்டல மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலபத்ராஜ் (28). இவர் தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் சென்னைக்கு வந்துள்ளார்.
இவர்கள் சாய்பாபா படம் கொண்ட சிறிய வாகனம் மூலம் பகல் நேரத்தில் சென்னையில் உள்ள சாலைகளில் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் தங்கி வந்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பாலபத்ராஜ் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த மெரினா போலீஸார் விரைந்து விசாரித்தனர். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் சரக `சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மெரினா `புளூ பீச்' கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, கடற்கரை பகுதி முழுவதும் தீவிரமாக தேடினர்.
பொதுமக்கள் கூட்டத்துக்கிடையே அனைத்து இடங்களிலும் தேடி, இறுதியில் கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஒரு குழந்தை தனியாக நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டனர்.
அங்கு சென்று பார்த்தபோது, அது காணாமல்போன பாலபத்ராஜின் 2 வயது பெண் குழந்தை என்பது தெரியவந்தது.
அந்த குழந்தையை சிங்கப்பெண் போலீஸார் மீட்டு மெரினா போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மெரினா போலீஸார் குழந்தையை தந்தை பாலபத்ராஜிடம் ஒப்படைத்தனர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த குழந்தை இடம் மாறி சென்றதால் தொலைந்தது தெரியவந்தது.