

கிழிந்துபோன துணியை தைத்து வைத்தது போல திமுக கூட்டணி ஒரு ஒட்டு போட்ட கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார்.
தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தினார். அப்போது விஜய் பேசியதாவது: இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்த வந்தவர்கள் என சொல்லுவார்கள்.
ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்காதவராக, சட்டவிரோத மணல் குவாரி வைத்திருக்காதவராக, கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் தாக்காதவராக இருக்க வேண்டும். எனவே, மக்களுடன் நிற்கும் வேட்பாளர்களை நான் தேர்ந்தெடுத்து உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களை எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான்.
மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போல, கிழிந்த துணியை தைத்து வைத்தது போல திமுக கூட்டணி ஒரு ஒட்டு போட்ட கூட்டணி. எனவே உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்.
இது பாமரர்களுக்கும், ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் செய்யும் அடிமைகளுக்கும் நடக்கும் தேர்தல். இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
இந்த தேர்தல் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
வாக்குறுதிகள் அறிவிப்பு இளைஞர்களுக்காக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறேன். போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும். 12 ஆம் வகுப்புக்கு பிறகு பி.ஹெச்.டி வரை பிணையம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும்.
TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான ஆட்சேர்ப்பு அட்டவணை வெளியிடப்படும். 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு 4000 ரூபாயும் பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.
பட்டதாரிகளுக்கு மாதம் 10,000 ரூபாயும் ஐ.டி. படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.
நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும். வேலைவாய்ப்பில் நம் இளைஞர்களுக்கே முன்னுரிமை. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியில் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இளைஞர்கள் தங்களின் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம். தமிழக பாரம்பரியத்தை உலக அளவில் பரப்ப நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.