

பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் வழங்கிய நினைவு பரிசுடன் விஜய்.
தவெக ஆட்சி அமைந்தால் ஆதார் அட்டை போன்று தமிழ்நாடு அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, ஏஐ தரவுகளுடன் லஞ்சம் இல்லாத நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கன்னியாகுமரியில் ரோடு ஷோ நடத்தினார். முன்னதாக மகாதானபுரம் ரவுண்டானாவில் வேனை விட்டு கீழே இறங்கி, ரவுண்டானாவை சுற்றி விசில் ஊதியபடி சைக்கிள் ஓட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்த சிறிய மேடையில் ஏறி விஜய் பேசியதாவது: தவெக ஆட்சி அமைந்தால் லஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் நலத்திட்டங்கள் போய்ச் சேரும். இதற்காகவே ஆதார் அட்டை போன்று தமிழ்நாடு அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, ஏஐ தரவுகளுடன் லஞ்சம் இல்லாத நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ஆகிறது. இந்த லஞ்சம் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, அமைச்சருக்கும் செல்கிறது. பட்ஜெட் ஒரு ஆவணமாக மட்டும் தான் நமக்கு தெரியும். அந்த நிதி எங்கே செல்கிறது எனத் தெரியாது. அது சிதம்பர ரகசியம் போன்று ஸ்டாலின் சார் ரகசியமாக உள்ளது.
தமிழ்நாட்டில் 10.5 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. அரசின் ஒவ்வொரு செலவும் நம்ம பிள்ளைகள், கிராம திட்டங்களில் இருந்து திருடப்பட்டது. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். நான்கு முனை போட்டி என எதுவும் இல்லை. இங்கு திமுகவுக்கும், தவெகவுக்கும் இருமுனை போட்டி தான் உள்ளது. தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும்.
தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தமிழக மக்கள் நலத்திட்டங்களை பெற பிரத்யேக கார்டு வழங்கப்படும். நலத்திட்டங்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். ‘வெற்றி தமிழ்நாடு’ சூப்பர் செயலி உருவாக்கப்படும்.
மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் புதிய இணையசேவை உருவாக்கப்படும். 10,000 கையெழுத்துகளுடன் மனு அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏஐ சிட்டி உருவாக்கப்படும். தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் ஏஐ புத்தாக்க மையம் உருவாக்கப்படும். எனவே ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கட்டும். இவ்வாறு விஜய் பேசினார். பின்னர் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை மூன்றரை கிலோ மீட்டர் தூரம் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்றார்.