

பரமக்குடியில் நெசவாளர்களுடன் இணைந்து பாவு பிரிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஐபிஎல்-லில் நடந்தது சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடக்க வேண்டும். டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ருசிகரமாகப் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: திறமையான நிர்வாகத்தால் நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம். அதன் பயனாக நாட்டிலேயே முதல் மாநிலமாக 11.01 சதவீத பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்.மகளிர் விடியல் பயணத்துக்கான பேருந்துகளை விரைவில் அமையப் போகிற திராவிட மாடல் ஆட்சியில் அதிகரிக்கப் போகிறோம். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயரப் போகிறது. புதுமைப் பெண் திட்டத்தில் ரூ. 1,500 ஆக உயரப் போகிறது. இல்லத்தரசிகளுக்கு ரு.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்பட உள்ளது.
கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய பாஜக அரசு தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைத் தண்டிக்கப் பார்க்கிறது.
உக்ரைன் போரை நிறுத்தி விட்டேன், அமெரிக்காவை அலற விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் விஸ்வகுரு பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கையுடன் மீனவர் பிரச்சினை குறித்து பேசச் சொன்னால் மவுன குரு ஆகி விடுகிறார். தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைத்திருந்தால் இப்படி அல்லல்பட விட்டிருப்பாரா?
சென்னையில் ஓய்வு பெற்ற நீதி அரசர் அரிபரந்தாமன் ஜீரோ பிஜேபி என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இதைத் தொடங்கி வைத்தவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர்.
அவர், ‘‘தமிழ்நாட்டு தேர்தல் நாட்டுக்கே முக்கியமான தேர்தல். பாஜகவுக்கு விழுகிற ஒவ்வொரு வாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் போற்றிப் பாதுகாக்கும் உயர்ந்த விழுமியங்கள் மீது விழக்கூடிய மரண அடி. மத நல்லிணக்கம், மொழி நல்லிணக்கம், மாநிலங்களுக்கு இடையேயான நல்லிணத்துக்கான மரண அடி’’ என்று எச்சரித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்று சொல்லியிருக்கிறது. நம்முடைய பன்முகத் தன்மைக்கு பாஜக விட்டிருக்கின்ற நேரடி சவால் இது. மேற்கு வங்கத்தில் விட்டிருக்கின்ற இந்த சவாலை தமிழ்நாட்டில் பாஜகவால் விட முடியவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருப்பது திராவிடப் பெருஞ்சுவர். இதை பாஜகவும் உணர்ந்திருக்கிறது.
பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று பேசுகிறார்கள். இதை ஒரு நாளாவது பழனிசாமி கண்டித்திருக்கிறாரா? பொது சிவில் சட்டம் குறித்து பழனிசாமியின் நிலைப்பாடு என்ன? அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கும் விழுகின்ற வாக்குகள். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியது. அதைபோல சட்டமன்றத் தேர்தலிலும் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, நேற்று காலை மு.க. ஸ்டாலின் பரமக்குடி எமனேசுவரத்தில் சாந்தாராம் என்ற நெசவாளர் வீட்டிற்கு சென்று, அங்கு நடை பெறும் நெசவுப் பணியை பார்வையிட்டார். முதல்வர் தறியில் அமர்ந்து ஆர்வமுடன் நெசவு செய்து பார்த்தார். பின்னர், அதே பகுதியில் பாவு பிரிக்கும் நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் முதல்வர் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் பாவு பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.