

புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன்
புதுச்சேரி: "தாதாபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக ரூ.120 கோடி செலவிட்டுள்ளது. இதன் மீது தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இருவரின் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாரும், சட்டப்பேரவை தற்காலிக தலைவருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த்துக்கு வாக்களித்த தட்டாஞ்சாவடி தொகுதியின் வாக்காளர் அனைவருக்கும் அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியானது முதல்வர் ரங்கசாமியின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும். தட்டாஞ்சாவடி முதல்வருடைய செல்லமான தொகுதி என்பது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் மலிவு பொய்யான குற்றச்சாட்டுகளை செவிமடுக்காமல் அவர்களுக்கு இந்த தேர்தலின் மூலம் அமைதியாக இருந்து தங்களது வாக்களிப்பின் மூலம் நல்ல தீர்ப்பினை வழங்கிய தட்டாஞ்சாவடி மக்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
மேலும் அவர், “புதுச்சேரியில் விஜய்க்கு செல்வாக்கு இல்லை என்பது தட்டாஞ்சாவடி தேர்தல் முடிவிலிருந்தே உங்களுக்கு தெரியும். சினிமா மோகம், ரீல்ஸ் வெளிப்பாடு தமிழக மக்களிடம் எடுபடும், புதுச்சேரி மக்களிடம் எடுபடாது என்பது இந்த தேர்தல் முடிவு காட்டியுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் வாசலில் தான் இருந்தார். அவரை நாங்கள் சேர்க்கவில்லை. அதனால் அவர் சென்றுவிட்டார். அதிமுக, தவெக ஒன்றுதான் என்று அவர் கூறினால், தவெக கட்சியை கலைத்துவிட்டு எங்கள் கட்சிக்கு வரச்சொல்லுங்கள். இனி அவர்கள் விசில் சின்னத்தில் நிற்க வேண்டாம். இரட்டை இலை சின்னத்தில் நிற்கட்டும்.
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முழுமைாக செல்வாக்கை இழக்கவில்லை. மக்கள் வாக்குகளை அளித்துள்ளனர். தமிழக இடைத்தேர்தலை பொருத்தவரை பணபலம், ஆட்சி அதிகாரம், அடக்குமுறை இவை அனைத்தும் சேர்ந்து, மக்கள் ஏமாற்றப்பட்டு வாக்குகளைப் பெற்றுள்ளனர். தாராபுரம் தவெக வேட்பாளரின் ஒப்புதல் வாக்குமூலம் அனைவருக்கும் தெரியும். ரூ.15 லட்சம் ஒரு நாளிலேயே செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கான ஆடியோ இருக்கிறது. அது உண்மையா பொய்யா என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யட்டும். இது சம்மந்தமாக தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக ரூ.120 கோடி வரை செலவிட்டு உள்ளனர். இதையும் தேர்தல் ஆணையம் முன்வந்து வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக பலகட்ட போராட்டத்தின் காரணமாகவும், மக்களிடம் அவர்கள் காட்டிய அனுகுமுறையால் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதிமுக குறித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், பல கட்சியில் உண்மையான தலைவர்கள் கேள்வி கேட்டால் என்னிடம் கேளுங்கள், தவெக ஒரு கட்சி என்று பேசவேண்டாம். அது ஒரு கம்பெனி. அதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.