

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்தது.
மொத்தம் 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களுடன், ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று முன்தினம் சந்தித்தார். இதையடுத்து, ஆட்சி அமைக்க அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி, நேரு விளையாட்டு அரங்கை ஒட்டிய ராஜா முத்தையா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை எதிரே உள்ள பெரியார் சாலை, சென்ட்ரல் நோக்கிச் செல்லும் பல்லவன் சாலை, தீவுத்திடலை ஒட்டிய அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணிக்கே கனரக வாகன சேவை நிறுத்தப்பட்டது. 8 மணிக்கு அனைத்து வாகன சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து பாதுகாப்பு அணிவரிசை வாகனங்கள் புடைசூழ, காரில் புறப்பட்ட ஜோசப் விஜய் 8.45 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கை வந்தடைந்தார். அவரைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், ஆளுநர் அர்லேகரும் அரங்குக்கு வந்தனர்.
பிறகு, ராகுல் காந்தியுடன் ஜோசப் விஜய் 10.04 மணிக்கு மேடையேறினார். மேடைக்கு ஆளுநர் 10.09 மணிக்கு வந்தார். அவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்ற ஜோசப் விஜய், அமைச்சரவையில் இடம்பெற உள்ளவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
‘ஆண்டவன் மீது ஆணையிட்டு..’: இதைத் தொடர்ந்து, வந்தேமாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர், பதவியேற்பு நிகழ்வுகளைத் தொடங்க ஆளுநர் அனுமதி வழங்கினார். இதன்பிறகு, பதவிப் பிரமாணம் செய்து வைக்க வருமாறு ஆளுநரை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் அழைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்..’ என்று தொடங்கி, ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்று கூறி, அவர் பதவியேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏக்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன், ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, ச.கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
குழுப் புகைப்படம்: பின்னர், ஆளுநருடன் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராகுல் காந்தியும் அப்போது உடன் இருந்தார். பதவிப் பிரமாண நிகழ்வுகள் முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்ட ஆளுநரை முதல்வர் வழியனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 2 மாதங்களில் 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டம்தோறும் சிறப்பு படை ஆகிய 3 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 3 முக்கிய கோப்புகளில் விழா மேடையிலேயே முதல்வர் ஜோசப் விஜய் கையெழுத்திட்டார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய தரவுப் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்க ராஜன், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக எம்எல்ஏ வன்னி அரசு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், புதிய தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், திரையுலகில் முதல்வரின் நண்பர்களான ஜெய், கதிர், த்ரிஷா, பாடகர் க்ரிஷ் - சங்கீதா, ஸ்ரீமன், சஞ்சீவ் - ப்ரீத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் முதல்வர் ஜோசப் விஜய்யை காண்பிக்கும் போதெல்லாம், அரங்கமே அதிரும் வகையில் தவெகவினர் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.