வாய்ப்புக் கிடைக்காதவர்களை வளைக்கத் திட்டம்! - கண்ணிவைத்து காத்திருக்கும் தவெக

வாய்ப்புக் கிடைக்காதவர்களை வளைக்கத் திட்டம்! - கண்ணிவைத்து காத்திருக்கும் தவெக
Updated on
1 min read

கட்சியின் முதல் மாநாட்டிலேயே, “எங்களுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்” என்று வாகாக வலைவீசிய தவெக தலைவர் விஜய் அடுத்ததாக இப்போது, மற்ற கட்சிகளில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் ஒதுக்கப்படும் சீனியர்களை வளைக்க கண்ணிவைத்து காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகள் சிலர், “கரூர் சம்பவத்துக்குப் பிறகு, ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் நாங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காக சில மறைமுக வேலைகளைச் செய்தன. அதையெல்லாம் சமாளித்து எங்கள் தலைவர் விஜய் மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் தவெக-வை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் அமர்க்களமான தொடக்கம் தான் செங்கோட்டையனின் வருகை.

செங்கோட்டையனின் 50 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வோம் என்று தலைவர் விஜய் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வந்திருக்கிறார். இன்னும் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் என்னதான் அனைவரையும் அரவணைத்துச் சென்றாலும் ஒரு தொகுதியில் ஒருவருக்குத்தான் சீட் கொடுக்க முடியும்.

ஒருவருக்கு சீட் கொடுத்தால் எதிர்பார்த்துக் காத்திருந்த மற்ற நான்கு பேருக்கு நிச்சயம் அதிருப்தி ஏற்படும். அப்படியான நபர்களை தவெக-வுக்கு கொண்டு வருவது தான் தலைவரின் அடுத்த பிளான்.

இப்படி வரும் நபர்களில் தகுதியானவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பும் அளிக்கப் போகிறது தவெக. ‘இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லை... இந்த லட்சணத்தில் அத்தனை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை எங்கு தேடிப் பிடிக்கப் போகிறார்கள்?’ என்று தவெக-வை இப்போது கேலி செய்யும் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் நாங்கள் யாரென்று போகப் போகத் தெரியும்” என்றனர்.

வாய்ப்புக் கிடைக்காதவர்களை வளைக்கத் திட்டம்! - கண்ணிவைத்து காத்திருக்கும் தவெக
ஓபிஎஸ் ‘ரிட்டர்ன்’ வியூகம் - இபிஎஸ் கிரீன் சிக்னல்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in