ஓபிஎஸ் ‘ரிட்டர்ன்’ வியூகம் - இபிஎஸ் கிரீன் சிக்னல்?
சமீபத்தில் அமித் ஷாவை சந்தித்தத ஓபிஎஸ், “புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு கிடையாது” என்று வெளிப்படையாகச் சொன்னார். இதன் பின்னணியில், தங்களை மீண்டும் பழனிசாமி கட்சியில் சேர்த்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் தன்னை சந்தித்தது பற்றியும், அவர் மீண்டும் அதிமுக-வில் இணைய விருப்பம் தெரிவித்தது பற்றியும் பழனிசாமியிடம் அமித் ஷாவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் இணைப்பு தொடர்பாக தனித்தனியே ஆலோசனை நடத்தி இருக்கிறார் பழனிசாமி.
இது குறித்து தென் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “ஓபிஎஸ் இணைப்பு விஷயமாக பழனிசாமி பேசியது சற்றே மாற்றமாகத் தெரிகிறது. அதிமுக வெற்றி பெற்று பழனிசாமியை முதல்வராக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எங்கள் தரப்பிலிருந்தும் அவருக்கு சில யோசனைகளைச் சொல்லி இருக்கிறோம்.
அப்போது, சசிகலா, தினகரனை சேர்க்காவிட்டாலும் ஓபிஎஸ்ஸை மட்டுமாவது மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவரிடம் எங்களில் சிலர் தெரிவித்தோம். வழக்கமாக ஓபிஎஸ் பேச்சை எடுத்தாலே பேச்சை மாற்றும் பழனிசாமி, தற்போது அவர் விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓபிஎஸ்ஸுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஒரு சிலர் அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பினர், “அமித் ஷா - ஓபிஎஸ் சந்திப்பின் முக்கிய நோக்கமே அதிமுக-வில் மீண்டும் ஓபிஎஸ்ஸை இணைப்பது குறித்துப் பேசத்தான். அமித் ஷாவும் பழனிசாமியிடம் பேசி முடிவெடுக்கலாம் எனச் சொன்னதால் ஓபிஎஸ் அமைதிகாக்கிறார். ஆனால், பழனிசாமி தரப்பில் இருந்து இதுவரை எந்த ரியாக்ஷனும் வரவில்லை.
இபிஎஸ் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். ஒருவேளை பழனிசாமி பழையபடியே அழுத்தமாக இருந்தால், தனக்குத் தெரிந்த வழியைப் பார்க்க ஓபிஎஸ்ஸும் தயாராகவே இருக்கிறார்” என்றனர். - ஒய்.ஆண்டனி செல்வராஜ்