

விருதுநகர்: விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது போல் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட தவெக ஒன்றியச் செயலாளரை பொறுப்பில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. அப்போது, அங்கு சென்ற தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அதிகாரி போல் ஆய்வு செய்து, குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கியதை வீடியோவாக பதிவு செய்து, சினிமா பாடலுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களின் சிகிச்சையை அனுமதியின்றி வீடியோ, புகைப்படம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தவெக நிர்வாகி முத்துவேல் வெளியிட்ட ரீல்ஸ் சர்ச்சையானது.
எனவே, கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல் அப்பொறுப்பில் இருந்து 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான எம்எல்ஏ செல்வம் உத்தரவிட்டுள்ளார்.