

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இந்தத் தேர்தலுக்கும் தொடருமா தொடராதா என சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் கூட்டணி தொடர்வதை கடந்த மாதம் காரைக்கால் வந்த அமித் ஷாவை சந்தித்த பின்பு தெளிவுபடுத்தினார் ரங்கசாமி.
இதைத் தொடர்ந்து புதுச்சேரிக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. “மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக, லஜக பிரித்துக் கொள்வோம்” என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டில் தங்களுக்கு இடமளிக்கப்படாததால் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில், லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் கட்சியான லஜக-வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என ரங்கசாமி போர்க்கொடி தூக்கினார். ஜோஸ் சார்லஸ் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு ரங்கசாமி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதை மனதில் வைத்தே அவரைக் கூட்டணிக்குள் சேர்க்க கேட் போட்டார் ரங்கசாமி. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மன்சுக் மாண்டவியா ரங்கசாமியை சந்திப்பதற்காக தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். வந்தவர், இரவு 11 மணியை தாண்டியும் ரங்கசாமியை சந்திப்பதற்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், ஏனாமில் இருந்து திரும்பிய ரங்கசாமி, அப்பா பைத்தியசாமி கோயிலி்ல் வழிபாடு செய்தார். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகிகள், லஜக-வை கூட்டணியில் சேர்த்தால் பாஜக கூட்டணி வேண்டாம்’ என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மாண்டவியாவை சந்திக்காமலேயே வீட்டுக்கு திரும்பி விட்டார் ரங்கசாமி.
அவருக்குப் பதிலாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் மாண்டவியாவை சந்தித்து தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையில் காரசார விவாதம் நடைபெற்றது. முடிவாக, “காலையில் மீண்டும் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு அனைவரும் கலைந்தனர்.
இதையடுத்து நேற்று காலை 9 மணியில் இருந்தே என்.ஆர்.காங்கிரஸ் தரப்புக்காக பாஜக-வினர் காத்திருந்தனர். ஆனால், இரண்டு மணி நேரம் ஆகியும் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதையடுத்து, பாஜக தலைமையின் அழைப்பின் பேரில் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் செல்வம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டனர். டெல்லியில், பாஜக வேட்பாளர் பட்டியலை மேலிடத்திடம் சமர்ப்பித்த நிர்வாகிகள், ரங்கசாமியின் நிபந்தனையையும் தெரிவித்தனர்.
இதையடுத்து ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு ஜோஸ் சார்லஸ் தரப்போடு பாஜக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து, 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவுக்கு லஜக வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, பாஜக தரப்பில் பிடிவாதம் காட்டுவதால் கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக-வுடன் ரங்கசாமி கைகோக்கப் போவதாக நேற்று சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் ஓடியது.
அதற்கு இடமளிக்காத வகையில் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து ரங்கசாமி உடனான கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறது பாஜக. இருந்தாலும் இந்த விஷயத்தில் ரங்கசாமி இறுதியில் என்ன முடிவெடுப்பார் என்பது அவர் வணங்கும் அந்த அப்பா பைத்தியம் சாமிக்குத்தான் தெரியும்.
இரண்டாவது சாய்ஸ்: என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபாலிடம் கேட்டதற்கு, "லஜக-வை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்று தெரிவித்தோம். அதை கட்சி மேலிடத்தில் கேட்டு வருவதாகச் சொல்லித்தான் பாஜக-வினர் டெல்லி சென்றுள்ளனர். நம்மை ‘வேண்டாம்’ என்று முடிவெடுத்து, பாஜக முதல்வரானாலும் வாழ்த்துகள்’ என்று தான் முதல்வர் ரங்கசாமி சொல்கிறார். அப்படி ஒரு நிலை வந்தால் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தயார் செய்துள்ளோம். வேட்பு மனு தாக்கலுக்கு தயாராக இருக்கிறோம். வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்வோம். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டால் என்டிஏ கூட்டணி தொடரும். இதில் பாஜக-வுக்கு விருப்பம் இல்லாவிட்டால், தவெக-வுடன் எங்கள் தலைவர் கூட்டணி செல்வார் என எதிர்பார்க்கிறோம்.
பாஜக மறுத்தால் தான் தவெக-வுடன் பேசுவோம். தவெக கூட்டணி அமைத்தால் என்.ஆர்.காங்கிரஸ் 20 இடங்களில் போட்டியிடும். பாஜக-வுடன் இருக்கவே எங்களுக்கு விருப்பம். ஆனாலும் அவர்கள் எடுக்கும் முடிவின்படி எங்களின் அடுத்தகட்ட செயல்பாடு இருக்கும்" என்றார்.