

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ம. பிரபு
ஊழல், விளம்பரம் மட்டும் செய்து வந்த திமுக ஆட்சியின் ஆட்டத்துக்கு கடந்த 15-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கு இப்போது வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
‘சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக-விடம் இருந்து தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன்படி விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். போதைப் பொருள், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை ஜரூராக நடக்கிறது. இதைப்பற்றி கவலைப்படாத, கட்டுப்படுத்த திராணியற்ற, திறமையற்றவராக முதல்வர் இருக்கிறார். மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் சீரழிவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. போதைப்பொருள் விற்பனை அதிகரித்தபோது உளவுத்துறை விழிப்போடு இருந்து தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக உளவுத்துறை, ஸ்டாலின் குடும்பத்துக்கு ஏவல் செய்யும் துறையாக இருக்கிறது. சென்னை மாநகரில் பட்டப்பகலில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், இன்றுவரை குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடைய குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினமும் அதிகாரிகள் துணையுடன் கனிமவளம் கொள்ளை போகிறது. கரூரில் ரவுடிகளை வைத்து தினமும் 3 ஆயிரம் லாரிகளில் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பகிரங்கமாக மணல் கடத்தப்படுகிறது. நகை, பணம் போல திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளைத் திருடுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் இருக்கும் ஏழைகளின் கிட்னியை முறைகேடாக திமுக எம்எல்ஏ-வின் மருத்துவமனையில் திருடி இருக்கிறார்கள்.
மது விற்பனையில் மட்டும் நான்காண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி கொள்ளை அடித்திருக்கின்றனர். மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குதில் முதல் மாநிலம் தமிழகம் தான். அத்தனை பேரையும் கடன்காரர்களாக ஆக்கிவிட்டார் ஸ்டாலின். நாம் தான் கடனை கட்ட வேண்டும். கடந்த 75 நாட்களில் தமிழகத்தில் 246 கொலைகள் நடந்துள்ளது. கொலை நடக்காத நாளே இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து யாருக்கும் பாதுகாப்பில்லை. கடந்த ஓர் ஆண்டில் 1,408 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்கிறார்கள், அமைச்சர்கள் முன்வந்து பதில் சொல்ல முடியாத நிலை.
திமுக 525 வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின். மக்கள் திமுக-வின் பொய்யைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியை விரட்டியடிக்க முன்வந்துவிட்டார்கள்.
அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், தூய்மைப் பணியாளர்களை திமுக அரசு கொடுமைபடுத்தியது. சத்துணவு அமைப்பாளர்களும் போராடினார்கள். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல், விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டத்துக்கு கடந்த 15-ம் தேதியோடு முடிவு கட்டப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கு இப்போது வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது.
பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமுதாயத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம்; நல்லாட்சி கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, "அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் முழுமையாக வெளியிடப்படும். அதேபோல் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டையும் விரைவில் இறுதி செய்வோம்" என்றார்.
பை பை ஸ்டாலின்! - ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மேடையில் இருந்து புறப்பட்ட பழனிசாமி மைக் அருகில் வந்து கைகளை உயர்த்தி காட்டி, 'பை பை ஸ்டாலின்' என்றார். இதையடுத்து அக்கட்சி தொண்டர்களும் அதையே சொல்லி ஆரவாரமாக கோஷம் எழுப்பினர்.