

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன்தான் கூட்டணியை தொடருவோம் என காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பும், தவெகவுடன் சேருவோம் என இன்னொரு தரப்பும் கச்சை கட்டி நிற்பது நீடிப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது.
2004-ம் ஆண்டு முதல் 2014 மக்களவைத் தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று வருகிறது. இடையில் சில முரண்பாடுகள் வந்தாலும், தேசிய அளவிலான அரசியல் நகர்வுகள் மற்றும் பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒன்றாகவே பயணிக்கின்றன.
இந்தச் சூழலில்தான், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு’ என்று திமுகவை கோபப்படுத்தும் ‘டோனில்’ பேச ஆரம்பித்தனர். இன்னும் சிலர் தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் இப்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு தரப்பு தவெக கூட்டணிதான் வேண்டும் என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பு திமுக கூட்டணியே தொடர வேண்டும் என்கின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திமுக கூட்டணி வேண்டும் என்கின்றனர். அதே நேரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் தவெக கூட்டணிக்கு அடிபோடும் வகையில் ‘ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள்’ என கலகம் விளைவிக்கின்றனர்.
தவெக கூட்டணியை விரும்பும் காங்கிரஸார் சில முக்கிய காரணங்களை அடுக்குகின்றனர். அதாவது, 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம். அதுமட்டுமின்றி ‘கிங் மேக்கர்’ கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கலாம். இளைஞர்கள் மத்தியிலும் கட்சியின் இமேஜை உயர்த்தலாம் என்பது போன்ற கணக்குகளை சொல்கின்றனர்.
அதேநேரத்தில் திமுக கூட்டணியை விரும்புவோர், தேசிய அளவில் திமுகவின் எம்.பிக்கள் பலம் நாடாளுமன்றத்தில் தேவை. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளவும் திமுகவின் குரல் முக்கியமானது என்று சொல்கின்றனர்.
தவெக கூட்டணியை விரும்புவோர் சொன்ன கருத்துகளை கேட்ட மேலிடமும் சில முக்கிய விஷயங்களை கவனிக்கிறது. அதன்படி, தவெகவுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் ரசிகர்களின் வாக்குகளைப் பெறலாம். தென் மாநிலங்களில் விஜய்யின் பிரச்சாரத்தை காங்கிரஸுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என சொல்கின்றனர்.
ஆனால், தற்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையின் ஆதரவு முழுக்கவும் திமுக கூட்டணி வேண்டும் என்ற கோணத்தில்தான் உள்ளது. திமுக கூட்டணியில் சில தொகுதிகள் குறைவாக பெற்றாலும், அதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பதுதான் அதற்கு காரணம்.
அதுபோல 2029 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியின் பலம் நமக்கு தேவை என்று வாதிடுகின்றனர். ஒருவேளை கூட்டணி விஷயத்தில் காங்கிரஸின் உட்கட்சியில் பெரும் சலசலப்புகள் உருவானால், மாவட்ட செயலாளர்கள் கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் சூழல் ஏற்படும். அதற்கு ஏற்பவே தனக்கு ஆதரவான புதிய மாவட்ட செயலாளர்களை செல்வப்பெருந்தகை நியமித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸில் எழுந்துள்ள கலகக் குரல்களால் திமுக உச்சபட்ச கோபத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே சில அமைச்சர்கள் காங்கிரஸ் மீது வசைமாறி பொழிய ஆரம்பித்துள்ளனர். ஆனால், ‘வெண்ணெய் திரளும் நேரத்தில் பானையை உடைக்கக் கூடாது; பொறுமையுடன் இருப்போம்’ என்று அமைதி காக்கின்றனர். காங்கிரஸின் இந்த ஊசலாட்டம் காரணமாகவே திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தாமதமாவதாகவும் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும்? - தவெக கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என வெளிப்படையாகவே சொல்லியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்ஏசி. மேலும், 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 10 அமைச்சர்கள் என்றெல்லாம் தூண்டில் போட்டுப் பார்க்கிறது தவெக வட்டாரம்.
அதே நேரத்தில், எந்தச் சூழல் வந்தாலும் திமுக கூட்டணிதான் என்று ஒரே முடிவோடு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தவெக ஆஃபரை பயன்படுத்தி கடந்த முறை பெற்ற 25 தொகுதிகளை விட கூடுதலாக 5 இடங்களாவது பெற வேண்டும் என்றும், ஒரு ராஜ்ய சபா சீட் பெற வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
தவெக வைத்து பூச்சாண்டி காட்டி ஏற்கெனவே டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் அதிமுக கூட்டணியில் நல்லதொரு ‘டீலிங்’கை முடித்த நிலையில், அதே பாணியில் ‘ஆதாயம்’ பெறவே காங்கிரஸ் இந்த சலசலப்புகளை உருவாக்குகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்... காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்று?