திமுக மாநில மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி: முக்கிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி திமுக மாநாடு ஏற்பாடுகள்.

திருச்சி திமுக மாநாடு ஏற்பாடுகள்.

ர.செல்வமுத்துகுமார்.

Updated on
2 min read

திருச்சி: திமுக சார்பில் திருச்சி சிறுகனூரில் நாளை நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

திமுக சார்பில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் மாநில தேர்தல் அரசியல் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது.

இதற்காக சிறுகனூரில் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவினர் மாநாடு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு 200 ஏக்கரில் மாநாட்டு அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 240 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 300 ஏக்கரில் 15 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

240 அடி நீளத்தில் மேடை... இதுகுறித்து திமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூறுகையில், ‘அரசியல் கட்சி மாநாட்டில் இதுவரை 240 அடி நீளத்தில் இவ்வளவு பெரிய மேடை அமைத்ததில்லை. இதுவே முதல் முறை. ஏற்கனனே திமுகவை தொடர்ந்து, தவெக 200 அடி நீள மேடை அமைந்திருந்தது. அதுவே பெரிய மேடையாக இருந்தது. தற்போது இது தான் மிகப்பெரிய மேடை’ என்றனர்.

மேடையின் பின்னணியில் மாநாட்டு நிகழ்வுகளை காணும் வகையில் 100 அடி நீளம், 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

தவிர மாநாட்டு அரங்கு முழுவதும் 168 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திரைகளில் மாநாடு நிகழ்வுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகும்.

கோட்டை வடிவிலான 1,000 அடி நீள பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாடு அரங்கு முழுவதும் 66 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு, ஒரு பாக்ஸில் 5,000 பேர் அமரும் வகையில் 3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

மாநாடு அரங்குக்குள் நுழைய 48 இடங்களில் நுழைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சியினர் அரங்குக்குள் நுழையும்போதே அனுமதி அட்டை, உணவு, 500 மி.லி., குடிநீர் பாட்டில் அடங்கிய பையும் உடனே வழங்கப்படும். இருக்கைகளில் தனியாக 500 மி.லி., குடிநீர் பாட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

மாநாட்டில் பங்கேற்கபதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் நாளை திருச்சி வருகிறார். கோர்ட் யார்டு ஓட்டலில் ஓய்வெடுக்கும் அவர் மாலை 5 மணியளவில் சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து முகப்பு அருகே நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றிவிட்டு மாநாட்டு அரங்குக்குள் காரில் நின்றபடி கட்சி நிர்வாகிகளை பார்த்து கையசைத்தபடி செல்கிறார்.

பின்னர் மாநாடு மேடை வரை அமைக்கப்பட்டுள்ள 600 அடி நீள ரேம்பில் நடந்து மேடைக்கு செல்கிறார். அமைச்சர்கள், துணை முதல்வர் உதயநிதி, கட்சி நிர்வாகிகள் பேசிய பிறகு முதல்வர் பேசுகிறார்.

கடந்த 2021 மாநாட்டில் இதே சிறுகனூரில் நடைபெற்ற மாநாட்டில் தான் 7 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்போதைய மாநாட்டில் அதேபோல சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். 60 வயது கடந்த மூத்த ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்புக்காக மாறிய மாநாட்டின் தலைப்பு

திமுகவின் 12-வது மாநில மாநாடு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாநாடு மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மாபெரும் மாநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், ‘தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் கட்சி மாநாடு நடத்த முடியாது என்பதால் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு என குறிப்பிடப்பட்டுள்ளதாக’ தெரிவித்தனர்.

மாநாட்டில் என்னென்ன வசதிகள்:

* விவிஐபிக்கள், விஐபிக்கள் அமர தனித்தனி அரங்குகள், உணவருந்தும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* பத்திரிக்கை, மீடியாவினருக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அரங்கு.

* ரமலான் நோன்பு காலம் என்பதால், முஸ்லிம்கள் தொழுகை நடத்த வசதியாக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

* 4 லட்சம் பேருக்கு தேவையான முட்டை குஸ்கா, சிக்கன் கிரேவி, தயிர் பச்சடி, தால்சா, பிரெட் ஆம்லேட், கடலைமிட்டாய், மிக்ஸர், முந்திரி, திராட்சை, பேரீட்சையில் தயாரிக்கப்பட்ட நட்ஸ் பைட், 500 மி.லி., குடிநீர் பாட்டில் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.

* மாநாட்டுக்கு வருபவர்களுக்கு முதலுதவி, சிகிச்சை வழங்க தயார் நிலையில் 10 மருத்துவக்குழுவினர் உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 10 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

* மாநாடு அரங்கம் மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதிகளை கண்காணிக்க 2,000-க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* ஒரு லட்சம் பேர் உணவருந்தும் வகையில் நான்கு உணவருந்தும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* அரங்கம் முழுவதும் சிகப்பு நிற நைலான் விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.

* மாநாடுக்கு வரும் வாகனங்களை நிறுத்த 15 இடங்கள் ஆங்காங்காங்கே பிரித்து பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு செல்வதற்காக மேப்புடன் கூடிய க்யூஆர் கோடு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால், வாகன நிறுத்தும் இடத்துக்கான லொக்கேஷன் வந்துவிடும். இதனால் போக்குவரத்து இடையூறின்றி வாகனங்கள் செல்ல முடியும்.

<div class="paragraphs"><p>திருச்சி திமுக மாநாடு ஏற்பாடுகள்.</p></div>
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மம்தா அரசு அவமதித்தது வெட்கக்கேடானது: பிரதமர் மோடி கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in