

புதுடெல்லி: மேற்குவங்கத்தின் கோசாய்பூரில் நேற்று சந்தாலி பழங்குடியினரின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கினார். ஆனால் சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்டுமே விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்தார்.
இதன்பிறகு பழங்குடியினர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: அரசு மரபின்படி என்னை வரவேற்க முதல்வரோ, மாநில அமைச்சரோ வந்திருக்க வேண்டும். அவர்கள் வரவில்லை. முதல்வர் மம்தா என் மீது அதிருப்தியில் இருக்கிறாரா? எதுவாக இருந்தாலும் இந்த விவகாரத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சிலிகுரி அருகேயுள்ள பிதான் நகரில் சந்தாலி பழங்குடியினர் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாநில அரசு திடீரென கோசாய்பூருக்கு மாநாட்டை மாற்றி உள்ளது. இந்த இடம் மிகவும் சிறியது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்க முடியாது. முதல்வர் மம்தா எனக்கு தங்கை போன்றவர். மாநாடு இடத்தை மாற்றியது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்குவங்க அரசு மேற்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு முர்மு பேசினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இது மிகவும் வெட்கக்கேடானது. இதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்ந்தது இல்லை. குடியரசுத் தலைவரே தனது வேதனையை பதிவு செய்துள்ளார். மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் அரசு வரம்புகளை மீறி உள்ளது.
குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு, மேற்குவங்க அரசு முழு பொறுப்பு. குடியரசுத் தலைவர் அலுவலகம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. அந்த அலுவலகத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டியது அனைவரின் கடமை ஆகும். திரிணமூல் காங்கிரஸுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.