

சென்னை: புதிதாக நிர்யணம் செய்யப்பட்டுள்ள கட்டணத்துக்கு ஏற்ப ஆட்டோ மீட்டரை மாற்ற உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த ஜூலை 9-ம் தேதி ஆட்டோ ரிக் ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்ய அலுவலர் குழு அமைக்கப்பட்டது. ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்துகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்த குழு பரிந்துரைகளை வழங்கியது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் குறைந்தபட்ச பயண தூரம் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50ஆகவும், அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25, காத்திருப்புக் கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரவு நேர கட்டணம் வழக்கமான கட்டணத்தின் 1.5 மடங்கும், மலைப் பாதைக் கட்டணம் வழக்கமான கட்டணத்தின் 1.2 மடங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் 6 மாத காலத்துக்குள் தங்களது கட்டணமானியை (மீட்டர்) புதிய கட்டணத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்.
அதுவரை போக்குவரத்துத் துறை இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பயணிகளின் பார்வைக்காக வாகனத்தில் வைக்க வேண்டும்.
ஆட்டோவில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, கட்டண அட்டையின் உண்மைத்தன்மையை பயணிகள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
போக்குவரத்து துறையின் tnsta.gov.in என்ற இணையதளத்தில் கட்டண அட்டையை பார்வையிடலாம். அதிக கட்டணம் குறித்த 1800 425 5430 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.