

சென்னை: சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தல் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், சிறைத் துறையினர் சூழலுக்கு ஏற்ப துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி சிறைத் துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை புழல் மற்றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக தேனியில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தப்பிய கைதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தாலும், பலத்த பாதுகாப்பையும் மீறி தப்பியது பாதுகாப்பு குறைபாட்டை காட்டுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதுஒருபுறம் இருக்க, சிறைத் துறை அதிகாரிகளுடன் அப்பிரிவு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். மேலும், குறைகள் இருப்பின் அதுகுறித்தும் தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் மாவட்டச் சிறைகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸார் துப்பாக்கியுடன் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்புவரை கண்காணிப்பு கோபுரங்களில் சிறைத் துறை போலீஸார் துப்பாக்கியுடன்தான் கண்காணித்து வந்தனர். அதன் பிறகு அவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைகளில் உள்ள கைதிகளின் நடமாட்டம் மற்றும் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நேரத்தில் கைதிகளை யார் யார் சந்திக்கின்றனர்.
அதில், ஏதேனும் குற்ற சதித்திட்டம் உள்ளதா என சிறைத் துறை உளவுப் பிரிவினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றாலோ, தப்பும் நோக்கில் சிறைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினாலோ சிறைத் துறையினர் துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.