

மதுரை: கோயில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பிக்க மண்டல இணை ஆணையர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மயிலம் பொம்மாபுரம் ஆதீனம் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.ராமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களில் பெரும்பாலானோர் அரசியல் பின்னணி கொண்டவர்கள். மற்ற மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தோர் யார், அவர்கள் நியமனத்துக்கான காரணம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு. ஆனால் அறங்காவலர் நியமனம் தொடர்பான தகவல்களை அறநிலையத் துறை பொதுவெளியில் வெளியிடுவதில்லை.
அறங்காவலர்கள் தேர்வுச் செயல்முறையில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. அறங்காவலர் நியமனம் இறுதியாகும் முன்பு விண்ணப்பதாரர்களைச் சரிபார்க்கும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. ஆனால், அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விவரங்களை பகிர்ந்துகொள்வதில்லை.
எனவே, அறங்காவலர்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள், அறங்காவலர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் மற்றும் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான உத்தரவு ஆகியவற்றை அறநிலையத் துறை ஆணையரின் வலைதளம் மற்றும் சம்பந்தப்பட்ட கோயில்களின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அறங்காவலர்கள் நியமன உத்தரவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தேதியிலிருந்து மேல்முறையீட்டுக்கான கால அளவைக் கணக்கிடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘‘இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறையின் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.