95-வது பிறந்த நாளையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை

ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் மரியாதை
95-வது பிறந்த நாளையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை
Updated on: 
1 min read

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 95-வது பிறந்த தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தினர்.

அப்துல் கலாமின் 95-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கலாம் நினைவிடத்தில் அவரது அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன் ஷேக் தாவூது, மருமகன் நிஜாம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசு அதிகாரிகள் கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, அவரது தேசிய நினைவகத்தைப் பார்வையிட்டனர்.

95-வது பிறந்த நாளையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை
2,500 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய விரைவில் அரசாணை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in