

சென்னை: மத்திய பாஜக அரசின் தவறான வெளிநாட்டுக் கொள்கைக் கண்டித்து, தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் மார்ச்8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த நாளில் வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது.
ஏற்கெனவே பொருளாதார பாதிப்பு காரணமாக அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால் சராசரி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.114.50 உயர்த்தப்பட்டு ரூ.2,043.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள டீ, காபி போன்ற பானங்களின் விலை உயரும்.
பிரதமர் மோடியின் தவறான வெளிநாட்டுக் கொள்கை காரணமாக அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவு போக்கு இஸ்லாமிய நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக இறக்குமதியையே நம்பியிருக்கிறது.
போர் காரணமாக ஈரானில் இருந்தும் பிற வளைகுடா நாடுகளிலிருந்தும் எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய பாஜக அரசின் தவறான வெளிநாட்டுக் கொள்கையின் காரணமாக, குடும்பப் பெண்களின் பயன்பாட்டில் உள்ள காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் ஒருங்கிணைப்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிர் காங்கிரஸ் சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.