2026-27-ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: பட்ஜெட்டில் தகவல்

“ரூ.52 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தப்படும்”
2026-27-ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: பட்ஜெட்டில் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் பொதுக் கடன்களைப் பொருத்தவரை நடப்பு 2026-27-ம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறி யிருப்பதாவது: பொதுக் கணக்கின் கீழ் உள்ளபொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நிகர பொதுக் கடன், பொதுக் கணக்கு பொறுப்புகள் ரூ.1,21,653 கோடி, திருத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1,20,964 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, 2027-ம் ஆண்டில் நிலுவைப் பொறுப்புகள் ரூ.10,98,768 கோடியாக இருக்கும்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்த நிலுவைப் பொறுப்புகளின் விகிதம் 2027-28-ல் 26.57% ஆகவும், 2028-29-ல் 26.10% ஆகவும் மேலும்குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன்மூலம், தனது நிதி ஒருங்கிணைப்பு வழித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் கடன் நிலைத் தன்மையைப் பேண இலக்கு வைத்துள்ளது.

எதிர்காலத்தை நோக்கிய பாதைமுந்தைய அரசின் நிர்வாகக் குறைபாடுகளில் ஏற்பட்ட கடன் சுமையால் மாநிலத்தின் நிதிநிலை தற்போது நெருக்கடியை எதிர்கொள்ளும் போதிலும், இந்தஇடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் நிதிச் சமநிலையையும், அமைப்பு ரீதியான வலிமையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான, எதிர்காலத்தை நோக்கிய பாதையை அமைக்கிறது.

உயர்நிலை வருவாய் மேம்பாட்டுக் குழு, செலவின சீர்திருத்தக் குழு வழிகாட்டுதலின்கீழ், வருவாய்க் கசிவுகளை முறையாக அடைக்கவும், செலவினங்களைச் சீரமைக்கவும், மக்கள்நலச் சேவைகளை மேம்படுத்தவும் அரசு ஒரு சீரிய செயல்திட்டத்தை வகுத்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் தூய்மையான, வெளிப்படையான, மேம்பட்ட ஆட்சி மூலம் வளர்ச்சியை எதிர்நோக்கி, நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

வீண் செலவுகள் குறைக்கப்படும்: வருவாய் ஆதாரங்களை திறம்பட பெருக்கி, வீண் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொதுக் கடன்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆழமான நிறுவன வலிமை, சிறப்பான தொழில் சூழல், துடிப்பான மனித வளத்தைக் கொண்டுள்ள தமிழகம் இத்தகைய சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நீடித்த பொருளாதார ஆரோக்கியத்தை பெற்று, தொலைநோக்குப் பார்வை கொண்ட, சீரான, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27-ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: பட்ஜெட்டில் தகவல்
அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in