அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

நடப்பு 2026-27 நிதி ஆண்​டுக்​கான பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்​கல் செய்தார். இதில், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏழைகளுக்காக ‘வெற்றி வீடு’ திட்டம், பெண்களின் திருமணத்தன்று 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும், 10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள், 30,000 பெண்களுக்கு ஆடுகள் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக ‘வெற்றி’ என்ற முன்னொட்டு கொண்ட திட்டங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

2026-27 மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.3,50,027 கோடி. மாநிலத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இனி, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் கவனம் ஈர்க்கும் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்யப்படும். மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்ய ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில், 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ‘வெற்றி வீடு’ திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான மானியம் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட தொகையைவிட உயர்த்தப்பட்டு, ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது. முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், ஊரகப் பகுதிகளில் 30,000 பெண்களுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும். 30 ஆயிரம் பேர் பயன்பெறும் இத்திட்டம் ரூ.110 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் ஊரப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.

இதுதவிர இந்த பட்ஜெட்டில் மகளிரை கவரும் வகையில் அண்ணன் சீர்வரிசை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் திருமணத்தன்று 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ‘தாய் கேர்’ என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் கருவுற்ற பெண்கள் அவர்களுடைய மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம். இந்த மையங்களில், கருவுற்ற பெண்களுக்குக் கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் தவெக அறிவித்ததுபோல் 60 வயது வரையிலான அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், உரிமைத் தொகை உயர்த்துவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மட்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ரூ.139 கோடி ஒதுக்கீட்டில் 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் ரூ.131 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சென்னையில் விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ஆகிய 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும்.

மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம் கீழ் MY-HOME திட்டம் சென்னைப் பெருநகரத்தில் அறிமுகம் செய்யப்படும்.

திருநர் நலன் கருதி 5 மாவட்டங்களில் ‘அரண்’ தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதியில் ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக ‘அறிவகம்’ உருவாக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை இடம்பெறும் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை, குறுந்தொழில் நிறுவனங்களாக உயர்த்தும் நோக்கில் ‘சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்’ என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், இந்த ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 38,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் ‘நம்பிக்கை இல்லம்’ என்ற பெயரில் அமைக்கப்படும். இந்நிறுவனங்களில், மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, ஆரம்பகால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.

பொதுக் கடன்களை பொறுத்தவரை நடப்பு 2026-27-ம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பட்ஜெட்டை, “திராவிட மாடல் அரசின் ரீமேக் வெர்ஷன். சொன்னதைச் செய்யாத புஸ்வாண பட்ஜெட். ப்ளாஸ்ட் அல்ல வேஸ்ட்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட், மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க் தான் வழங்க முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள் | அணிவகுத்த ‘வெற்றி’ திட்டங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in