

சென்னை: தமிழக அரசின் சார்பில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் முதல்வரின் ஒப்புதலுடன் தொடங்கிவிட்டன. மேலும் இந்த மாநாட்டை ஒரே இடத்தில் மட்டும் நடத்த கட்டுப்படுத்தாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தொடர் அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழர்களை இணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஒரே மேடையில் இணைக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து அரசு தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, உலகளாவிய தமிழ் அறிஞர்களையும், கல்வியாளர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெறுவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாநாட்டில் உலகளாவிய தமிழ் சமூகத்தினரின் பரவலான பங்களிப்பை உறுதிசெய்வதே அமைச்சர் பயணத்தின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கல்விசார் விவாதங்கள் மட்டுமின்றி, செம்மொழி தமிழ் குறித்த கருத்தரங்குகள், புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கலாச்சாரப் பரிமாற்றம், அறிவுப் பகிர்வுக்கான அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.