

சென்னை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து, தனக்குக் கைப்பாவையாக வைக்கும் ஓர் அரசை உருவாக்குவதுதான், அமித்ஷாவின் திட்டம். அதற்கான முதல் படியை ஆளுநர் அர்லேகர் செய்ய ஆரம்பித்திருக்கிறாரா?” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி யெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை ஊழலும் திருட்டும் நடைபெற்றுள்ளது. கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்கள் மற்றும் சாமானியர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களான அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஷ்ரா ஆகியோர் உடனடியாகப் பதவி
விலகியிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி, நைனார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மவுனம் காப்பது ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கணக்குகளைச் சரிபார்க்கவும் முடிகிறது. ஆனால், ராமர் கோயில் போன்றவை தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருக்கிறது.
ஆர்டிஐ வரம்பிற்குள் வராததால், அங்கு நடக்கும் தவறுகளைக் கேள்வி கேட்க முடிவதில்லை. எனவேதான் கோயில் சொத்துக்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக சதி செய்கின்றன.
ஆளுநர் அர்லேகர் பாஜகவினுடைய ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார். கூட்டணி பேசுவது போல 3 கட்சிகளை பார்த்திருக்கிறார். ஒரே மாதிரியான புகாரை ஜெராக்ஸ் போட்டு வாங்கியிருக்கிறார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது; இதெல்லாம் ஆளுநர் செய்யும் வேலையா? ஆளுநர் அலுவலகத்தை, ‘கமலாலயம்’ என்றே பெயர் மாற்றியிருக்கலாம். அமித்ஷாவின்திட்டம் என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைகவிழ்த்து, தனக்குக் கைப்பாவையாக வைக்கும் ஒரு அரசை உருவாக்குவதுதான்.
அதற்கான சதித் திட்டத்தின் முதல் படியை ஆளுநர் செய்ய ஆரம்பித்திருக்கிறாரா என்பதுதான் கேள்வி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப் பங்கீட்டை 90:10 என்ற விகிதத்தில் இருந்து 60:40 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் தமிழக அரசுக்குக்கூடுதலாக ரூ.5,000 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை உடைத்து, ஏழைகளை நகரங்களுக்கு விரட்டுவதே மோடியின் நோக்கம்.
நாளை (இன்று) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தவெக, காங்கிரஸ், விசிக உள்ளடக்கிய தற்போதைய மதச்சார்பற்ற சமூக நீதிக்கானக் கூட்டணி மக்கள் நலனுக்கான நீண்ட காலகூட்டணியாகத் தொடரும். பாஜக, ஆர்எஸ்எஸ் தவறுகளை துணிச்சலோடு நெஞ்சுக்கு நேராக எதிர்ப்பதே காங்கிரஸின் முதன்மைக் கொள்கை என்று அவர் தெரிவித்தார்.