

சென்னை: தமிழகத்தில் அமையவுள்ள மாதிரி பதிவு மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும். ஆவணப் பதிவுக்கான சட்டப்பூர்வ அதிகாரம் பதிவுத்துறையிடமே இருக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆவணப்பதிவு, திருமணப் பதிவுச் சேவைகளை எளிமைப்படுத்தி துரிதமாக வழங்க மாநிலம் முழுவதும் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நடப்பு (2026–27) நிதி ஆண்டில் முதல்கட்டமாக ரூ.7.84 கோடியில் சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோவை வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் இந்த மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இது பதிவுத்துறையின் சட்டப்பூர்வப் பொறுப்புகளை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. தற்போது சார்பதிவாளர்கள் ஆவணங்களை சட்டப்படி பரிசீலித்து பதிவு செய்வதுடன், மக்களுக்கான உதவி, அடிப்படை வசதிகள் பராமரிப்பு உள்ளிட்ட முகப்பு நிர்வாகப் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது.
இப்பணிகளை பிரித்து சார்பதிவாளர்கள் சட்டரீதியான ஆவணப் பரிசீலனையில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலேயே மாதிரி பதிவு மையங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த மையங்களின் கட்டமைப்பு, தினசரி செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள் மட்டுமே டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படும் தனியார் சேவை வழங்குநரிடம் 5 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்.
ஆவணங்களை பரிசீலித்து பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் சார்பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கும். ஆவண எழுத்தர் மற்றும் தற்போதைய பதிவு நடைமுறைகளில் எவ்வித மாற்றமுமில்லை.
தற்போது சொத்து அமைந்துள்ள பகுதியின் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவுசெய்ய முடியும். புதிய மாதிரி மையங்களில், ஒரே பதிவு மாவட்டத்துக்குள் வசதியான மையத்தில் பதிவுச்சேவை பெறலாம்.
மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப சாதாரண சேவைக்கு ரூ.2 ஆயிரம், தட்கல் அல்லது பிரீமியம் சேவைக்கு ரூ.5 ஆயிரம், தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆவணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் பிரத்யேக சாப்ட்வேர் மூலமாக பராமரிக்கப்படும். 5 மையங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், மேலும் 20 மையங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.