

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 35.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை அண்ணாநகரில் அதிகபட்சமாக 36.07% வாக்குகளும், குறைந்தபட்சமாக திருவிக நகரில் 31.37% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அண்ணா நகர் – 36.70%
சேப்பாக்கம் – 34.44%
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – 35.71%
எழும்பூர் – 34.40%
துறைமுகம் – 34.39%
கொளத்தூர் – 37.06%
மயிலாப்பூர் – 31.55%
பெரம்பூர் – 36.26%
ராயபுரம் – 31.71%
சைதாப்பேட்டை – 34.38%
திருவிக நகர் – 31.37%
தியாகராய நகர் – 39.08%
ஆயிரம் விளக்கு – 35.69%
வேளச்சேரி – 37.18%
வில்லிவாக்கம் – 36.92%
விருகம்பாக்கம் – 39.39%
பிரபலங்கள் வாக்களிப்பு: வாக்குச் சாவடிக்கு வழக்கம் போல் காலையிலேயே வந்த நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் நபராக வாக்களித்துச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் தொகுதியில் குடும்பத்துடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
சென்னையில் தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு அவரது கணவரும் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினி காந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சிவக்குமார், ஜீவா, நடிகை த்ரிஷா, நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா எனப் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.
களத்தில் 4,023 வேட்பாளர்கள் : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.56 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.