

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவமும், மாணிக்கம் தாகூர் தனது தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருப்பதும் சத்தியமூர்த்தி பவனை அதிரவைத்துள்ளது.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: திமுக கூட்டணியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, "40 தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் போர்க்கொடி தூக்கினர். இதனால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. இறுதியில் சோனியா காந்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பிறகே, ராகுல் காந்தி பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தார். மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் 35 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்தும் திமுக பணியவில்லை. இறுதியில் ப.சிதம்பரம் மூலமாக 28 தொகுதிகளுக்கு காங்கிரஸை செல்வப்பெருந்தகை ஒப்புக்கொள்ள வைத்தார். இது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திமுக ஒதுக்கியிருக்கும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கருதும் தொண்டர்கள், வேட்பாளர் தேர்விலும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதாவது செல்வப்பெருந்தகை தனது ஆதரவாளர்கள் 20 பேருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த பட்டியலைத் தயாரித்து டெல்லிக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் டெல்லிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி-க்கள் புகார் அளித்துள்ளனர்.
நிலைமை மோசமானதால் வேட்பாளர் தேர்வு கூட்டத்தை ராகுல் காந்தியே நடத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று மதியம் அந்த கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாடு சேவாதள காங்கிரஸ் தலைவர் குங்ஃபூ விஜயனுக்கு வாய்ப்பு கோரி அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல் மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசினா சையத்திற்கு வாய்ப்பு வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்ட சேவாதள தலைவர் லெட்சுமி என்பவர் திடீரென தன் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சக நிர்வாகிகள் அவரை தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாலையில் மீனவர் பிரிவு காங்கிரசாரும் தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இவ்வாறான தொடர் குழப்பங்களால் டெல்லியில் நேற்று நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போனது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரான மாணிக்கம் தாகூர், தனது பதவியை ராஜினாமா செய்து தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் காங்கிரஸில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று மீண்டும் டெல்லியில் வேட்பாளர் தேர்வு தொடர்பான கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.