விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்

விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்
Updated on
2 min read

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அடுத்ததாக கொளத்தூருக்கு பிரச்சாரத்திற்குச் சென்றார். அப்போது உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், பொதுமக்களின் கூட்ட நெரிசலில் விஜய்யின் வாகனம் நீண்ட நேரம் சிக்கித் தவித்தது. கொளத்தூரில் அனுமதி பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை போலீஸார் அகற்றியதோடு, மின் இணைப்பையும் துண்டித்தனர்.

பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கான 10 மீட்டர் இடைவெளி எங்கும் கடைபிடிக்கப்படவில்லை. கூட்டம் மிகுந்த பகுதியில் திடீரென அரசுப் பேருந்துகளை அனுமதித்து போலீஸார் செயற்கையான நெரிசலை உருவாக்கினர். இவ்வளவு பெரிய கூட்டத்தை நிர்வகிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. தமிழக காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நட

வடிக்கை இல்லை. எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு விதிகளின்படி விஜய்க்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு: இதற்கிடையே, விஜய்யின் பிரசாரத்துக்கு போலீஸார் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்தனர். பிறகு ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருச்சியில் வேட்புமனுவை முடித்துவிட்டு விஜய், தமிழகம் முழுவதும் வீதி வீதியாக செல்லவிருக்கிறார். அந்த பிரச்சாரத்துக்கு விஜய்க்கும் மக்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். காவல்துறையின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றார்.

சோஷியல் மீடியாவில் ட்ரோலான கடிதம்: நிர்மல் குமாரின் கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக, மத்திய உள்துறை செயலாளர் என்று அஜய் குமார் பல்லாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அஜய் குமார் பல்லா தற்போது அந்தப் பதவியில் இல்லை. அவர் மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் பணியாற்றி வருகிறார். நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல், பழைய விவரங்களை வைத்து தவெக கடிதம் எழுதியிருப்பது அக்கட்சியின் நிர்வாகச் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

“யார் உள்துறை செயலாளர் என்ற அடிப்படைத் தகவலைக் கூட சரிபார்க்காமல் இவ்வளவு முக்கியமான கடிதத்தை எப்படி அனுப்பினார்கள்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டு தவெக கொடுத்த கடிதமும் விமர்சனத்தை கிளப்பியது. இதேபோல் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு என்பவர்தான் போட்டியிடுகிறார். ஆனால், அவரின் பெயரை மாற்றி பிரபு என விஜய் சொன்னதும் சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்
சீர்காழியிலும் உதயசூரியனில் மதிமுக போட்டி: வைகோ முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in