

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:
அலகுத்தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு
கிராமப்புற வறுமையை முற்றிலும் ஒழித்து, அனைவருக்கும் கண்ணியமான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, புதிய மாநில வீட்டு வசதி திட்டமான 'வெற்றி வீடு திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.
இதில், கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக, வீடு ஒன்றுக்கான அலகுத் தொகையை ரூ.3.10 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,500 கோடியில் 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
ஊரக வளர்ச்சித் துறையில் அனைத்து உட்கட்டமைப்பு திட்டங்களையும் ஒருங்கிணைத்து 'தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மற்றும் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு' என்ற விரிவான திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்கீழ் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம், கிராமப்புற இணைப்புச் சாலைகள் ஆகியவற்றுக்கென தனித்துணை திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு வெற்றி திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடியில் தனித்துணை திட்டம், மலைப்பகுதி ஊராட்சிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடியில் தனித்துணை திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தில், ஊரக ஏழை மக்களின் நலன் கருதி, மாநில அரசு இதுவரை இல்லாத அளவான ரூ.5057 கோடி பங்களிப்புடன் மொத்தம் ரூ.12642 கோடியில் திட்டத்தை செயல்படுத்தும். இத்திட்டத்தின்கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கையை நிறைவேற்ற ‘வெற்றி 150' என்ற முன்முயற்சியை அரசு செயல்படுத்தும்.
மகளிர் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்த 'சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்' தொடங்கப்படும். நல்ல செயல்திறனை வெளிப்படுத்தும் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மகளிர் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38 ஆயிரம் கோடியில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.39,609 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கு ரூ.560 கோடி
அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் மருத்துவ தேவைக்காக மக்கள் செலவிடும் தொகையை குறைக்கும் நோக்கில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.560 கோடி ஒதுக்கப்படுகிறது.
கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி: பட்ஜெட்டில், கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்மானியத்துக்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீன்பிடி உதவித் தொகை...
பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு ஒரு குடும்பத்துக்கு ரூ.6,000 என்ற அளவில் பணியில்லா காலங்களில் மீன்பிடி உதவித்தொகையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 1.93 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நதி இணைப்பு திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.150 கோடி உட்பட நதிஇணைப்புத் திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகள் மாசடைவதைத் தடுக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கான பணிகளுக்கான முதற்கட்ட ஆய்வுக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்த ஆய்வுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயண மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு
மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் திகழும். சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
தமிழக மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.1.05 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாக தொடங்கப்படும். மேலும் கபர்ஸ்தான்கள், கல்லறை தோட்டங்களின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தில் காயிதே மில்லத் விருது
300 திருக்குறள்களை சரளமாக கூறும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்மொழி தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை அரசு தொடர்ந்து நடத்தும். அதேபோல், காயிதே மில்லத் வரலாற்று பெருமையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று அவரது நினைவாக விருது வழங்கப்படும்.
இதுதவிர, முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழுக்கென பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்குதல் முன்னெடுக்கப்படும். கீழடி உள்ளிட்ட தொல்லியல், பாரம்பரிய தலங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிட கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது.