தமிழக பட்ஜெட் 2026-27: சுகாதாரம், சுற்றுலா, அறநிலையத் துறை ஒதுக்கீடு எவ்வளவு?

தமிழக பட்ஜெட் 2026-27: சுகாதாரம், சுற்றுலா, அறநிலையத் துறை ஒதுக்கீடு எவ்வளவு?
Updated on
2 min read

தவெக அரசின் முதல் பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்சன், சட்​டப்​பேரவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:

சுகாதாரத் துறைக்கு ரூ.23,357 கோடி

மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையம்

தமிழகம் முழுவதும் மூத்த குடிமக்களுக்காக 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாக தொடங்கப்படும். இதில் ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு இயன்முறை மருத்துவர் பணியில் இருப்பார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சென்று இலவச உடல் பரிசோதனை செய்வார்கள். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

‘தாய் கேர்’ உதவி மையம்: மாநிலம் முழுவதும் ‘தாய் கேர்’ என்ற பெயரில், கருவுற்ற பெண்களுக்கான சேவை, உதவி மையங்கள் அமைக்கப்படும். கருவுற்ற பெண்கள் பிரசவ நாள் நெருங்கும் வேளையில் இங்கு தங்கிபயன் பெறலாம். அவர்களுக்கு இலவச உணவு, மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

தொலைதூரப் பகுதிகள், கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு சிறப்பு மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், ‘மையம் - கிளை’ மருத்துவமனைகள் வகையிலான தொலை மருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.

தொற்றாநோய்கள், புற்றுநோயாளிகளின் தொடர் சிகிச்சைக்கு அத்தியாவசிய மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் மருந்து தேவையை பூர்த்தி செய்ய, தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடியாக உயர்த்தப்படுகிறது. சுகாதாரத் துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி

கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) அமைந்துள்ள தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுத் தலங்களின் தரத்தை உயர்த்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, சிறந்த முறையில் செயல்படும் 200 கலைக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 100 நாட்களுக்கு பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்காக ரூ.23 கோடி ஒதுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சுற்றுலா, கலை, பண்பாட்டு துறைக்குரூ.775 கோடி ஒதுக்கப்படுகிறது.

அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தவும், 250 தெப்பக் குளங்களை செப்பனிடவும், 75 மரத்தேர்களை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து 9,205 அறங்காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதிலும் 1,000 ஆண்டுகள் பழமையான 213 கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் ரூ.418 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பாதுகாப்பதிலும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் 2026-27: சுகாதாரம், சுற்றுலா, அறநிலையத் துறை ஒதுக்கீடு எவ்வளவு?
தமிழக பட்ஜெட் 2026-27: வெற்றி மடிக்கணினி முதல் நவீன சைக்கிள் வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in