

சென்னை: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கவே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை, மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். நாங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விடுவோம்..” - நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்றும் 50, 60-களில் பார்த்த பழைய திமுகவையும் இந்தியா மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக, தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
திமுக 50-களில் ‘திராவிட நாடு’ கொள்கை, உள்ளடக்கிய தனி சுதந்திர நாட்டை வலியுறுத்திய பிரிவினைவாத ஒழுக்கத்தை மொழியடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட சூழலில், 1962-ல் சீன ஆக்கிரமிப்புக்குப் பின், அரசியல் சூழ்நிலை காரணமாக அண்ணா இக்கோரிக்கையை முறையாகக் கைவிட்டு தேசியத்தின் பக்கம் நின்றார். இப்பொழுது பிரிவினைவாத திமுகவின், திராவிட மாடல் முதல்வர் தேர்தல் வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தை தலை குனிய வைக்கும் வகையில் இந்திய தாய் திருநாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய தேச விரோத பேச்சு மன்னிக்க முடியாதது.
தேர்தல் பயத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக, மொழி, ஜாதி, மத, இன வேற்றுமைகளை உருவாக்கும் வகையில், வகுப்புவாத, பிரிவினைவாதம் அரசியல் பேசி வந்த முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை வளர்ச்சியை முன்னேற்றத்தை அளிக்க முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு, எச்சரிக்கை விடுத்து பெண்களுக்கு எதிராக, பெண் உரிமையை சிதைக்கும் வகையிலும், அதை திசை திருப்பும் வகையிலும் செயல்படுவதை தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ், தமிழர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் 14 லட்சம் கோடி திட்டங்கள் தந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்ற பிரதமர் மோடியை தேர்தலுக்காக, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக, எச்சரிக்கை, மிரட்டல் விடுத்து, மத்திய, மாநில அரசுகளின் மேன்மையான உறவை இழிவுபடுத்தும் வகையில், அரசியல் நாகரிகத்தையும் இந்திய இறையாண்மையும் குழி தோண்டி புதைத்து விட்டார்.
தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொகுதி மறுவரையறை செய்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவோம். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் இறங்கி போராடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது.
மத்திய அரசை எதிரியாக காட்டி தமிழக மக்களை ஏமாற்றி இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று விடலாம் என்ற நினைப்பில் மத்திய அரசு மீது அவதுாறுகளை அள்ளி வீசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அதன் பிறகு போராடுவோம், இறுதி எச்சரிக்கை எனப்பேசி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் திட்டமிடுகிறார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள் என திமுக, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். அதுபோல இப்போது தொகுதி மறுவரையறையை வைத்து மக்களை ஏமாற்றி விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.
ஆனால், தமிழக மக்களை அவர் ஒருபோதும் முட்டாளாக்க முடியாது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதை தடுக்க, வழக்கமான பிரிவினைவாத சதியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார். யார் எதை எடுத்தாலும், எத்தனை மிரட்டல்கள் விடுத்தாலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தே தீரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.