

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி |கோப்புப் படம்
தஞ்சாவூர்: சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனைக் கூட்டத்தில் அவர் பேசியது: “சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மக்கள் பிரச்சினையைப் பேசி தீர்வு காண விவாதம் நடத்த வேண்டும். ஆனால், மக்கள் வரிப் பணத்தைப் பயன்படுத்தி நடைபெறும் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் வேடிக்கையாகவும், வினோதமாகவும், வேதனையாகவும் உள்ளன.
சட்டப்பேரவையை லாவணி கச்சேரியாக மாற்ற வேண்டாம். சாகுபடிக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகளும், மாதாந்திர உதவித் தொகை கிடைக்கப் பெறாமல் மாற்றுத் திறனாளிகள், பெண்களும் தவித்து வருகின்றனர்.
வன்முறைகளை சந்திக்கும் குழந்தைகள், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பிரச்சினைகளுடன் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவை குறித்து பேசத்தான் சட்டப்பேரவை உள்ளது. சொந்தப் பிரச்சினையைப் பேச மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை எச்சரிக்கை செய்கிறோம்.
தேர்தலின்போது 6 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த தவெக அரசு, தற்போது 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என வரம்பு நிர்ணயித்துள்ளதை தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இதற்காக மானியத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலாக காஸ் சிலிண்டராக வழங்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்நிலங்களில் வேறு தொழிற்சாலைகளைத் தொடங்குவோம் என அமைச்சர் கூறியிருப்பது 1,008 துணைக் கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் குருசாமி, வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.