

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் முதலில் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு ராமசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்ரி, கே. ராஜன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
முதல்வர் விஜய் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.52 மணிக்கு பேரவை வளாகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், செயலர் சாந்தி ஆகியோர் பூங்கொத்து வழங்கி அவரை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் சென்றனர்.
அவருக்கு முன்பாகவே முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக்குள் வந்து அமர்ந்திருந்தனர். காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்துடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. பின்னர், ஆளுநர் அர்லேகர் தனது உரையை தொடங்கினார். தமிழில் ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு, ஆங்கிலத்தில் 37 நிமிடங்கள் உரையை வாசித்தார்.
மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து, அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு போதைப் பொருள் தடுப்புப் படை அமைக்கப்படும். புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய உரையை ஆதரித்து, எதிர்த்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடியுள்ளது.