

சென்னை: அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் தேர்வில் சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய ஜூன் 8-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி. வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி நடத்தப்பட்ட அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் தேர்வில் (கிரேடு-2) தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, சில தேர்வர்கள் ஒருசில சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும், சிலர் உரிய சான்றிதழ்களை பதிவேற்றாமல் இருப்பதும், ஒருசிலர் முதன்மைத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
அத்தகைய தேர்வர்களின் பதிவெண்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய ஜூன் 8-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யுமாறும், மேலும், முதன்மை தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தாதவர்கள் அதை செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.