

சென்னை: தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி. உட்பட நாடு முழுவதும் 27 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று திங்கள்கிழமை தொடங்குகிறது.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவைஎம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமாக நடைபெறும் தேர்தல் மூலமாகவும் 3 இடங்கள் இடைத்தேர்தல் வாயிலாகவும் நிரப்பப்பட உள்ளன.
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் 2 இடங்கள், மணிப்பூர், அருணாச்சல், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் காலியாகின்றன. மேலும், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த மே 7-ம் தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக் காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் அவர் ராஜினாமா செய்ததால், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் சுனேத்ரா பவார் கடந்த மே மாதம் 6-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முடிகிறது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உயிரிழந்ததால், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார். அதன்பின், அவர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.வானார். அதனால் மாநிலங்களவை எம்.பி. பதவியை சுனேத்ரா ராஜினாமா செய்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. தேபாஷிஷ் சமந்தராய், தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார். அவரது பதவிக் காலம் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. ஓடிசா மாநிலத்தின் மூத்தஅரசியல்வாதியான தேபாஷிஷ் சமந்தராய் பிஜு ஜனதா தளம் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். அவர் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்த 3 இடங்களுக்கும் இடைத்தேர்தல் சேர்த்து நடத்தப்படுகிறது.
கடைசி நாள்... மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று ஜூன் 1-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து இன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 8-ம் தேதி கடைசி நாள். ஜூன் 9-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவைத் திரும்பப்பெற ஜூன் 11-ம் தேதி கடைசி நாள். ஜூன்18-ம் தேதி காலை 9 மணி முதல்மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் ஒரு காலியிடத்தைத் தவெக எளிதாக கைப்பற்றும். அந்த இடத்துக்கு தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா? அல்லது கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு வரைநிறுத்தலாமா என தவெக கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தவெக.வுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை அமைச்சரவையில் இடம் வகிக்கின்றன. அதேநேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் சேரவில்லை. எனவே, ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதால் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. ‘சீட்’ வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.