

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்வை(49). இவரது மனைவி வீரலட்சுமி(45). இவர்களுக்கு காவியா(15), தனலட்சுமி(16) ஆகிய மகள்களும், அஸ்வின்(10) என்ற மகனும் உள்ளனர். சேர்வை தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் மருதங்குடியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு காரில் வத்திராயிருப்பு திரும்பினார்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பெரியவன் மகன் கார்த்திக்(38), பெரியசாமி மனைவி அங்காள ஈஸ்வரி(30), சின்னவன் மகள் லட்சுமி(38) ஆகியோர் சென்றனர். காரை பாலுச்சாமி மகன் பூபதி(26) என்பவர் ஓட்டி சென்றார்.
மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் பூபதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அங்காள ஈஸ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
படுகாயமடைந்த சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காவியா, தனலட்சுமி, அஸ்வின் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும், லட்சுமி வத்திராயிருப்பு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.