

எ.வ.வேலு | கோப்புப் படம்
சென்னை: “சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஓடுவது, ஒளிவது, பதுங்குவது எல்லாம் திமுகவுக்கு பழக்கம் இல்லை. அரசியலை, அரசியலாக சந்திப்பதில் திமுக சளைத்தது இல்லை. இதயப் பிரச்சினைக்காக 2016ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில், மருத்துவர் ஜெயராமனிடம் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.
2023ல் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையாக உடல் பரிசோதனை மேற்கொண்டேன். இப்போது மீண்டும் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என கடந்த ஜூன் 15ம் தேதி விசாவுக்கு விண்ணபித்து, ஜூன் 17ம் தேதி விசா வழங்கினர். 17ம் தேதியே ஜூன் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.
ஆனால், ஜூன் 25ம் தேதி காலையில் என் வீட்டுக்கு காவல்துறை நண்பர்கள் வந்து, சோதனை மேற்கொள்வதாக சொன்னார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். பின்னர் ஜூன் 26ம் தேதி மீண்டும் டிக்கெட் புக்செய்து சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
எனக்கு ஒவ்வாமை, நரம்பு பிரச்சினை, இதயப் பிரச்சினை என மூன்று பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ச்சியாக மருத்துவப் பரிசோதனைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த முறை என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது என ரிப்போர்ட் என்னிடம் உள்ளது.
அப்போது என்னை ஜூன் 3ம் தேதி வரச்சொல்லி என் வீட்டில் சம்மன் ஒட்டியதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அதனை பேக்ஸில் அனுப்ப சொல்லி, நான் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 10 நாட்களில் வந்துவிடுவேன் என அந்த சம்மனுக்கு பதில் அளித்தேன்.
ஆனால், மீண்டும் 9ம் தேதி வரச்சொல்லி சம்மன் அனுப்பினார்கள். மருத்துவ பரிசோதனைகள் முடித்து நான் ஜூலை 12ம் தேதி சென்னை வந்துவிடுவேன், அதன் பின்னர் எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கடிதம் அனுப்பினேன்.
சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக வழக்கம் போல சென்றேன். சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்தேன், முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சொன்னேன். இதற்கு பின்னாலும், ஓடுகிறார், ஒளிகிறார், பதுங்குகிறார் என சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகள். நான் மருத்துவத்துக்காக சென்றேனே தவிர, சுற்றுலா செல்லவில்லை. ஆனால், அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவை கொறடாவாக நான் உள்ளேன். சமீபத்தில் 3 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகமான வினாக்களை நான் தான் எழுப்பினேன். அது என்னுடைய கடமை. நான் பேசவே கூடாது என அவர்கள் நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. இனி எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது” என்றார்.