

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இதில், ஓய்வு மற்றும் பணியில் இருந்த தொழிலாளர்கள் 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் 10 பெண்கள் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா ஜுவாங்கா (25), பிங்கி ஜுவாங்கா (23), சுமித்ரா ஜுவாங்கா (26) ஆகிய 3 பெண்கள் நேற்று உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. வேல்ஸ், வெங்கடேஸ்வரா, ஸ்டான்லி மருத்துவமனைகளில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மற்ற 40-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 27 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
விபத்துக்கு எதிராக திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.