

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளான கடந்தாண்டு டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்றக் கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிகுமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 2025 டிசம்பர்1-ம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர்
அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மதுரை அமர்வு, அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதேபோல், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பிரதான மனுதாரரான ராம ரவிக்குமார் சார்பில், மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் இடம் பெற்றுள்ள மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.