வானிலை முன்னறிவிப்பு: கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

படம்: ரகு.ஆர்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.1) கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.2 முதல் 4-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 5, 6 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 10 செமீ, சின்கோனா, உபாசி, வால்பாறையில் தலா 8 செமீ, சின்னக்கல்லாரில் 6 செமீ, தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
மக்களவையில் நிறைவேறியது பிறப்பு, இறப்பு திருத்த மசோதா: நோக்கம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in