

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்டிபிஐ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
திமுக அணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு அறிவித்தார். அதன்படி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
மேலும் அக்கட்சியின் சார்பில் திண்டிவனம் தொகுதியில் வன்னியரசு, கள்ளக்குறிச்சியில் மாலதி, பண்ருட்டியில் அப்துல் ரகுமான், அரக்கோணத்தில் எழில் கரோலினா, செய்யூரில் சிந்தனைச் செல்வன், திருப்போரூரில் பன்னீர்தாஸ், பெரியகுளத்தில் ஆற்றல் அரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்தார்.
அதன்படி, திருத்துறைப்பூண்டியில் க.மாரிமுத்து, தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், பவானிசாகரில் பி.எல்.சுந்தரம், திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி (எ) எம். சுப்பிரமணியம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.மகாலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கதிர்அரிவாள் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் டி.ராமச்சந்திரன் மற்றும் க.மாரிமுத்து ஆகியோர் ஏற்கெனவே தளி மற்றும் திருத்துறைப்பூண்டியில் எம்எல்ஏ.க்களாக உள்ளனர்.
ரவிக்கும், பி.எல்.சுந்தரத்துக்கும் கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் மீண்டும்வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறுகையில், “திமுகவிடம் நாங்கள் கேட்ட 5 தொகுதிகளை கிடைக்கபெற்ற நிலையில், மாநிலக் குழு, மாவட்டக்குழு கூட்டங்களை கூட்டி வேட்பாளர்களை தேர்வு செய்து ஒரு மனதாக அறிவித்துள்ளோம்.
இவர்கள் ஐவரும் கட்சியின் மாணவர் அமைப்பு,இளைஞர் அமைப்புகளில் பணிபுரிந்தவர்கள். இந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளிலும்நிச்சயமாக வெற்றிபெறுவோம்.” என்று கூறினார்.
மேலும், திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் அறிவிக்கப்பட்டுள்ளார்.